ராகுல் காந்திக்கே இந்த நிலைமை என்றால் என்னைப் போன்றோருக்கு என்ன நடக்கும் என்ற அச்சம் உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவில் நாம் தமிழர் கட்சியின் குருதிக் கொடை பாசறையின் தலைமை அலுவலகமான திலீபன் குடிலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “40 பேருக்கும் மேல் இறந்துள்ளார்கள். இது எப்படிப் பார்த்தாலும் சூதாட்டம்தான். ஆன்லைன் சூதாட்டம் எந்த வழியில் வந்தாலும் தடை செய்ய வேண்டும். அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும். தேவையில்லாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கக் கூடாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லையென சொல்வதற்கு மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநருக்கு எப்படி வந்தது. இவரது அதிகாரம் என்ன? அந்த பதவி எதற்கு? 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் நலன் சார்ந்து ஒரு சட்டத்தை கொண்டு வரும்போது அதற்கு கையெழுத்திட முடியாது எனச் சொல்வதற்கு அவர் யார்?
தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் கட்சியின் மீது எனக்கு வன்மம் உள்ளது. என் இனத்தின் பகைவனாக நான் பார்க்கிறேன். அதற்கு நேரெதிராக பாஜகவை மானிட குலத்தின் எதிரியாகவே பார்க்கிறேன். கருத்து சொன்னதற்கெல்லாம் தண்டனை எனக் கூறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்ட பொறுப்பை பறிப்பது என்பது உண்மையிலேயே ஜனநாயகப் படுகொலை. அது கொடுங்கோன்மை அதை ஏற்க முடியாது. அது யாருக்கு நிகழ்ந்தாலும் ஏற்க முடியாது. அதனால் தான் அதை எதிர்த்து அறிக்கை கொடுத்தேன்.
அவருக்கு சிறைத் தண்டனை கொடுத்ததே வேடிக்கை. 30 நாட்களில் பிணை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அவர் வழக்கை பார்த்துக் கொள்ளட்டும். அதனால் மக்கள் கொடுத்த பதவியை தகுதி நீக்கம் செய்தது என்பது தவறு. அதை எல்லாருக்கும் செய்ய வேண்டியதுதானே. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ராகுலை விட மோடி நாட்டைப் பற்றி மோசமாக பேசியுள்ளார். அவ்வளவு பெரிய குடும்ப பின்னணி கொண்ட ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் என்னைப் போன்ற சாதாரணமானோருக்கெல்லாம் என்ன நடக்கும்.ரொம்ப அச்சமாக உள்ளது. எதிர்காலத்தில் ஜனநாயகம் இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.