சிதம்பரம் புறவழிச்சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிதம்பரம் நகரம் சார்பில் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர், சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட இளமையாக்கினார் கோயில் தெரு உள்ளிட்ட 10 இடங்களில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் ஒரு சட்டமன்ற தொகுதியில் 100 காங்கிரஸ் கட்சியின் கொடிகள் ஏற்றுவது என்ற செயல் திட்டத்தின் கீழ், இன்றைக்கு சிதம்பரத்தில் 10 இடங்களில் கொடிகளை ஏற்றித் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் நடைபயணத்தின் வெற்றி என்னவென்றால், மக்கள் பிரச்சனைகளை இந்தியா முழுவதும் வெளிக்கொண்டு வருகிறார். அரசியல் அதிகாரம் பெறுவதற்கான நடைபயணம் அல்ல. நாட்டின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்; மக்கள் சாதி, மதத்தின் பெயரால் பிரிந்து கிடக்கக் கூடாது; மொழி ஆதிக்கத்தில் சிக்கி விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளார். 130 கோடி மக்களுக்கும் வழிகாட்டியாக இந்தப் பயணம் அமைந்திருக்கிறது.” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில்நாதன், மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், சிதம்பரம் நகரத் தலைவர் மக்கீன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.