திருச்சியில் நடந்த திராவிட கழகத்தின் கூட்டத்தில் திக தலைவர் கீ.வீரமணியின் உரையில் கிருஷ்ணனை இழிவாக பேசினார் என்று இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கலகத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இருத்தரப்பிலும் கைது நடவடிக்கைகளும் நடந்தன. கீ.வீரமணி கிருஷ்ணனைப் பற்றி பேசியது தவறு என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுகன் காந்தி கொடுத்த பேட்டியில்...
“எந்த செய்தியையும் பொய்யாக பரப்புவது பாஜகவின் வேலை. ஒரு பொய்யான செய்தியைப் பரப்பி அதன்மூலம் பதட்டத்தை உருவாக்கி வன்முறையைக் கொண்டுவருவதே இந்துத்துவா அமைப்புகளின் வேலையாக இருந்துள்ளது. எனவே, அவர்கள் சொல்வது எதையும் தயவு செய்து நம்பாதீர்கள்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடாதவர்கள் பாஜகவினர். கடைசியாக துடியலூரில் நடந்த சிறுமி கொலையில் ஈடுபட்டவர் ‘பாரத் இந்து சேனா’என்ற இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு பாலியல் குற்றங்களுக்குப் பின்னனியில் இருந்தவர்கள் பாஜகவைச் சார்ந்தவர்கள். அதைப்பற்றி நாம் கேள்வியெழுப்பக் கூடாது என்பதற்காக, அதை மடை மாற்றுவதற்காக, இதுமாதிரி பிரச்சாரம் நடைபெறுகிறது. ஏன் கோவையில், பொள்ளாச்சியில், சேலத்தில் இதுபோன்ற பாலியல் வன்முறைகள் அதிகமாக நடக்கிறது? கொங்கு மண்டலத்தில் இதுபோன்ற குற்றங்கள் அதிகம் நடக்க காரணம் என்ன? அங்கெல்லாம் இந்துத்துவா அமைப்புகள் வலிமையாக இருக்கின்றன. கடந்த காலத்தில் இந்துத்துவா நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதன் பின்னனியில் இதுபோன்ற பாலியல் குற்றங்கள்தானே இருந்திருக்கிறது? அதை மடை மாற்றுவதற்காகத்தான் கீ.வீரமணி பேசியதைக் கையில் எடுத்துக்கொண்டு பிரச்சனையாக மாற்றுகின்றனர். அதுதான் உண்மை.
இத்தனை ஆண்டுகாலமாக எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் பேசியதே இல்லை. அப்படி பேசினால் எங்களை வன்முறையாளராக சித்தரிக்கிறார்கள். நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட உங்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அவர்களைக் காவல்துறையை வைத்துப் பாதுகாக்கிறீர்கள். இதை கண்டுகொள்ளாமல் இருக்க
அய்யா வீரமணி மீது கவனத்தைத் திருப்புவது, அவர் மீது தாக்குதல் நடத்துவதெல்லாம் அநியாயம். ஒரு கருத்தைக் கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். அவர் பேசியதிற்கு பதில் விமர்சனம் வையுங்கள் அதை எதிர்கொள்கிறோம். அதை விட்டுவிட்டு ஏன் வன்முறையை கையாளுகிறீர்கள்? ஏன் பொய் பிரச்சாரம் செய்கிறீர்கள்? திராவிட கழகத்தினர் ஜனநாயக முறைப்படி அந்த பிரச்சனையை அணுகினர். அவர்களை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். திராவிட கழக திருச்சி மாவட்ட பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று தன் கண்டனத்தை தெரிவித்தார்.