ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பேசிய அண்ணாமலை, “நான் அளித்த பேட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவறாகப் புரிந்துகொண்டு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கடந்த மூன்று, நான்கு வருடங்களாக ஜெயலலிதாவின் ஆளுமை குறித்துப் பேசியிருக்கிறேன். நான் யாரைப் பற்றியும் தவறாகவும், தரக்குறைவாகவும் பேசவில்லை. என்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலையைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்ட அதிமுகவினர் சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் திருநெல்வேலி மாநகராட்சி 28வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், "1.5 கோடி அதிமுக தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டாதே ஜெயலலிதாவைப் பற்றிப் பேச உனக்குத் தகுதி உண்டா. அண்ணாமலையே நாவை அடக்கு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.