![ADMK general body member expelled from party](http://image.nakkheeran.in/cdn/farfuture/mPGTrYCjoIC4R85q1l8c27MOLctMc49496WOE7uhgsk/1644385647/sites/default/files/inline-images/th-1_2710.jpg)
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 12,838 வார்டுகளுக்கு வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஒ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இணைந்து அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினரான காண்ணாயிரம் உட்பட 10 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுதல்; திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுதல் மற்றும் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுதல் முதலான காரணங்களால், திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் வடக்கு பகுதி அதிமுக செயலாளர் மாதவராமன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிப் பொருளாளர் கணேசன், 10வது வட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், விஜி ஆகியோரும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளர் கரிகாலன், ராமநாதபுரம் நகரச் செயலாளர் அங்குசாமி, சீனிவாசன் மற்றும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் கண்ணாயிரம், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அவைத் தலைவர் கெபீர், உடுமலைப்பேட்டை நகர 10வது வார்டு செயலாளர் குமரேசன் ஆகியோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட கட்சி பதவிகளி இருந்தும் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்’ இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.