அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றன. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தின் பாதியில் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்குமாறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் இருவரும் நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு செல்லாது என்றும், ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனத் தீர்ப்பு அளித்தனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வரும் வேளையில், நேற்று எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டால் கட்சி செயல்பட முடியாத நிலை உள்ளது. எனவே இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார். அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை டிசம்பர் மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.