ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ்.எம்.சுகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் அம்மா பேரவையின் மாவட்டப் பொருளாளராக உள்ள இவர், 1996 முதல் 2006 வரை ராணிப்பேட்டை நகராட்சி கவுன்சிலராகவும், 2006 முதல் 2011 வரை நகர மன்றத் துணைத் தலைவராகவும் இருந்தவர்.
தற்போது மாநில நகர கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும், ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் உள்ளார். அ.தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இவரை மாற்ற வேண்டுமென அ.தி.மு.க.வின் 100- க்கும் மேற்பட்டோர் மார்ச் 11- ஆம் தேதி மாலை, ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில், சாலை மறியல் செய்தனர். அ.தி.மு.க. தலைமையைக் கண்டித்தும், வேட்பாளரை மாற்ற வேண்டுமென வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். அப்போது தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு இரண்டு அ.தி.மு.க. தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறும்பொழுது, "சுகுமார் காங்கிரஸ் கட்சியிலிருந்தார். அது உடைந்த போது த.மா.கா., பின்னர் மீண்டும் காங்கிரஸ், அதன்பிறகு அ.தி.மு.க.வில் இணைந்தார். அவரை விட அ.தி.மு.க.வில் நீண்ட காலமாகக் கட்சிப் பணியாற்றும் நிர்வாகிகள் பலர் உள்ள நிலையில், இவருக்கு சீட் வழஙகியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என்றார்கள்.