சமீபத்தில் தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது.இதில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக,தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் மற்றும் ஒரு சில கட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இதனால் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டும் சீட் ஒதுக்கின. இதில் ஒரு சில கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதியில் அந்த கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவர்கள் போட்டியிட்ட தொகுதியில் மட்டுமே தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் பணிகளை செய்தனர்.
ஒரு சில தொகுதிகளில் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும், மேலும் அதிமுக கட்சியின் உட்கட்சி பூசலால் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.குறிப்பாக தேமுதிக வேட்பாளர் சுதீஷ் போட்டியிட்ட தொகுதியில் மட்டுமே அக்கட்சியின் தலைமை மிகுந்த அக்கறை கொண்டதாகவும் மீதமுள்ள மூன்று தொகுதி வேட்பாளர்களை கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு தகவல் பரவியது இதனால் வேட்பாளர்கள் வெற்றி பறிபோகும் நிலையில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் ஒரு சில தொகுதிகளில் பாமக மற்றும் தேமுதிக கட்சியினரிடையே இருந்த மோதல் போக்கு மாறாமல் இருந்ததாகவும் தகவல் வந்தன. அதிமுக கூட்டணியில் இருந்த தனியரசுக்கு பாஜக மீது இருந்த அதிருப்தி காரணமாக கொங்கு மண்டலத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதியில் அதிக கவனம் செலுத்தவில்லை என்ற தகவலும் வந்தது.இதனையடுத்து வருகிற மே 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலின் பிரச்சாரத்தை திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடங்கிவிட்டனர்.இதில் அதிமுக கட்சி ஆட்சியை தொடர வேண்டுமெனில் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுக மட்டுமே அணைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதால் கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு தர மறுப்பதாக செய்திகள் வருகின்றன.இதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்காததே காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் அதிமுக நாடாளுமன்ற தேர்தலை விட இடைத்தேர்தலில் மிகுந்த கவனம் செலுத்தி ஆட்சியை தக்கவைக்க எடுத்த நிலையே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.இதனால் கூட்டணி கட்சிகள் இடைத்தேர்தலில் ஆதரவு என்று வெறும் அறிக்கையை மட்டுமே விட்டு பிரச்சாரத்தில் கவனம் செலுத்தவில்லை என்ற தகவலும் வந்து கொண்டிருக்கிறது.மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக தலைவர்களை எந்த பிரச்சாரத்திலும் ஈடுபடுத்த அதிமுக தலைமை விரும்பவில்லை என்ற தகவலும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.