தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை கனிமொழி பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒரு வாரம் நடக்கும் இந்த கண்காட்சியை ஓரிரு தினங்கள் முன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். இன்று திமுக எம்.பி. கனிமொழி பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நிகழ்கால சரித்திரத்தின் மிக முக்கியமான கண்காட்சியாக இதைப் பார்க்கிறேன். சமீபத்தில் நாட்டில் நிகழ்ந்துள்ள மிக முக்கியமான நிகழ்வுகளின் மிக அரிய புகைப்படங்களை பார்க்கும் வாய்ப்பும் இந்த கண்காட்சியில் கிடைக்கிறது. இன்று நம்முடன் இல்லாத பலரையும் புகைப்படங்களாக பார்க்கும் போது பல நினைவுகளையும் கொண்டு வரக்கூடிய ஒன்றாக இந்த கண்காட்சி இருக்கிறது.
பொதுவாக புகைப்படம் எடுக்கக் கூடியவர்களுக்கு வெளிச்சம் போன்ற அனைத்தையும் சரி செய்துவிட்டு படம் எடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கும். ஆனால், ஊடகங்களில் இருப்பவர்களுக்கு அதற்கான அவகாசம் இருக்காது. கிடைக்கக்கூடிய நேரத்தில் புகைப்படம் எடுக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட சூழலில் இவ்வளவு அழகான புகைப்படங்களை அவர்கள் எடுத்துள்ளது அதற்காக உழைத்திருக்கக் கூடிய அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்” எனக் கூறினார்.