
தமிழகத்தில் சட்டமன்றத் தோ்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், தேர்தல் தேதிக்காக காத்திருக்கும் கட்சிகள் பல, தங்களுடைய தொகுதி பங்கீட்டில் ஒரு உறுதியான நிலைபாடில்லாமல் உள்ளது.
அதிலும் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து இதுவரை வாய் திறக்காத நிலையில், இரு கட்சிகளின் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
இதனிடைய, “தேமுதிக தனித்துப் போட்டியிடவும் தயாராக உள்ளது” என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த வாரம் தெரித்திருந்தார். ஆனால், இன்றும் நாங்கள் அதிமுகவின் கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றும் கூறிவரும் நிலையில், இவர்களுடைய தொகுதி பங்கீடும் மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பெரும் போட்டியே நிலவி வருகிறது. தற்போது அதிமுக வசம் உள்ள கிழக்கு தொகுதிக்கு, திமுக, தேமுதிக, உள்பட கூட்டணி கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தேமுதிகவின் மாவட்டச் செயலாளரான டி.வி. கணேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த தேமுதிக தொண்டர் சாதிக் என்பவர் சுவரொட்டி விளம்பரம் செய்துள்ளார்.
அவர் விளம்பரம் செய்ததைவிட அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் திருச்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “வருங்கால சட்டமன்ற உறுப்பினரே.. வாழ்க பல்லாண்டு” என்ற வாசகம் பலரும் விமர்சிக்கக் கூடியதாக உள்ளது. ‘தேதியே அறிவிக்கல அதுக்குல்ல சட்டமன்ற உறுப்பினரா? கூட்டணியா? தனித்தா?’ என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காத நிலையில், இப்படிபட்ட போஸ்டர், தனித்து என்பதை உறுதி செய்வதாகத்தான் தெரிகிறது. அதிமுகவின் கூட்டணியில் இருந்து விடைபெற்று மீண்டும் தனித்துக் களம்காண தேமுதிக தயாராகி வருவதாக பேசப்பட்டு வருகிறது.