ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஏறத்தாழ 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முடிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இன்று மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளும் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தலில் மக்கள் கொடுக்கும் முடிவுகளை தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பு கொடுத்துள்ளார்கள். மக்கள் கொடுத்த தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் இருக்கிறது. 2024 தேர்தல் எங்களுக்கான தேர்தல்.
இந்த இடைத்தேர்தல் பாஜகவிற்கான தேர்தல் அல்ல. கூட்டணி கட்சியினர் நிற்கின்றனர். கூட்டணி தர்மத்தின் படி எங்கள் தொண்டர்கள் தலைவர்கள் எல்லோரும் வேலை செய்து கொடுத்துள்ளோம். 2024 களம் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். திமுக அரசின் 21 மாத கால ஆட்சிக்காக மக்கள் வாக்களித்ததாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் மக்கள் ஒரு விஷயத்தை சொல்லியுள்ளனர். பாஜக தொடர்ந்து வலிமையாக நிற்க வேண்டும் என்ற ஒரு கருத்தை சொல்லிக் கொண்டே இருந்தோம். இதில் பிரிந்து நிற்பது, இருவர் நிற்பது என்பதை விடுத்து சின்னத்தில் ஒருவர் நிற்க வேண்டும் என்று சொன்னோம். ஆளும் கட்சியை எதிர்க்கும் போது எந்த அளவிற்கு பலம் தேவைப்படுகிறது என்பதை உணர்த்தியுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர் தென்னரசு சரியான வேட்பாளரா என்றால் அவர் சரியான வேட்பாளர் தான். இரண்டு முறை எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார். அதிமுக சின்னத்தில் தான் நின்றார். பாஜக என்ன நினைத்ததோ அதுதான் நடந்தது.” எனக் கூறினார்.