சொமேட்டோ நிறுவனத்தின் புதிய பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட கடும் போட்டியால் முதல் நாளிலேயே எதிர்பார்த்த இலக்கைவிட கூடுதல் பங்குகளுக்கு ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
முன்னணி ஆன்லைன் உணவு வர்த்தக நிறுவனமான சொமேட்டோ, ஐபிஓ எனப்படும் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது. இதன் பங்கு வெளியீடு புதன்கிழமை (14.07.2021) தொடங்கியது. இதன்மூலம் 9,375 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் வெளியான ஐபிஓக்களில் சொமேட்டோவின் பங்கு வெளியீடுதான் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. 71 கோடியே 92 லட்சத்து 33 ஆயிரத்து 522 பங்குகளை விற்க முடிவு செய்திருந்த நிலையில், முதல் நாளிலேயே 75 கோடியே 64 லட்சத்து 33 ஆயிரத்து 80 பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்த பங்குகளில் இன்ஸ்டிடியூஷனல் அல்லாத முதலீட்டாளர்களுக்கும், சொமேட்டோ ஊழியர்களுக்கும் முறையே 12 மற்றும் 18 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 72 - 76 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 195 பங்குகளையும், அதன் மடங்கில் அதிகபட்சமாக 1,92,660 ரூபாய் வரையிலும் வாங்கலாம். அதாவது, அதிகபட்சமாக சில்லரை முதலீட்டாளர் ஒருவர் 13 லாட்டுகள் வரை வாங்க முடியும். ஒரு லாட் சைஸ் 14,820 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைப்பு ரீதியான முதலீட்டு நிறுவனங்கள் முழுமையாக பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளன. சில்லரை முதலீட்டாளர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு மேல் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து பங்குச்சந்தை வல்லுநர்கள் கூறுகையில், ''இந்தியாவில் சொமேட்டோ நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரியாக 10 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. ஆன்லைன் உணவு விநியோகத்தில் உலகளவிலும் இந்நிறுவனத்தின் சந்தைப் பங்கு விகிதம் நல்ல நிலையில் உள்ளது. அதனால் ஐபிஓ வெளியீடு குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்தே முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால்தான் முதல் நாளிலேயே எதிர்பார்த்ததை விடவும் சொமேட்டோ பங்கு வெளியீடுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது'' என்றனர்.
இதன் பங்கு வெளியீடு நாளை (ஜூலை 16) முடிவடைகிறது. முதலீட்டாளர்களிடையே இப்பங்கின் மீது ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்களுக்குப் பங்கு ஒதுக்கீடு விவரங்கள் ஜூலை 23ஆம் தேதி அறிவிக்கப்படும்.