சூரத்தில் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமி தங்கள் மகள்தான் என ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி, படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் நடைபெற்ற உடற்கூராய்வு சோதனையில் சிறுமியின் உடலில் 86 இடங்களில் காயமிருப்பதும், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தது. ஜம்மு மாநிலம் கத்துவா சிறுமி வன்புணர்வு படுகொலை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருந்த நிலையில், இந்த செய்தி வெளியானதால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில், சூரத்தில் கொல்லப்பட்ட சிறுமி தங்களுடைய மகள்தான் என ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். சூரத் சென்றடைந்த அவர்கள் காவல்துறை ஆணையர் சதீஷ் சர்மாவைச் சந்தித்து இந்தத் தகவலைத் தெரிவித்து, தங்களது மகளின் சடலத்தைத் தங்களிடம் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குடும்பத்தகராறு காரணமாக கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், பல மாதங்களாக தேடியும் கிடைக்கவில்லை. தற்போது குஜராத் மாநிலம் சூரத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட செய்திகளை ஊடகங்களில் பார்த்து வந்திருக்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமி தங்களின் மகள்தான் என்பதற்கான ஆதாரமாக அவளது ஆதார் அட்டையை காவல்துறையினரிடம் பெற்றோர் வழங்கியும், டி.என்.ஏ. சோதனைக்குப் பிறகே சடலம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துவிட்டனர். சிறுமி படுகொலையில் யாருக்கு தொடர்புள்ளது என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. குற்றவாளி பற்றிய தகவலுக்கு ரூ.20 ஆயிரம் வெகுமதி தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.