'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020' இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். புதுமையான பொருட்களைக் கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மென்பொருள் பிரிவுக்கான இறுதிப் போட்டியை ஆன்லைன் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில் காணொளியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
கோவையைச் சேர்ந்த மாணவிக்கு தமிழில் வணக்கம் என தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பிரதமர் பேசுகையில்,
இளைஞர்கள் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கேட்க ஆவலாக உள்ளேன். சவாலான காலகட்டத்தை மாணவர்கள் வெற்றிகரமாகக் கடந்து வருகிறார்கள். மழை பொழிவை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அனைவருக்குமான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இந்தியாவில் தரமான கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. 21ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் வளர்ச்சியை மனதில் வைத்தே கல்விக் கொள்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் விருப்பங்கள் நிறைவேற்றும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிநவீன கல்வியைப் பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கற்றல், ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தவே புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் நோக்கம், ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான். வெறும் பாட அறிவு மட்டும் மனிதனை உருவாக்கி விடாது. 21ஆம் நூற்றாண்டு அறிவின் யுகம். அறிதல், அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடித்தல் ஆகிய மூன்று முக்கிய நோக்கம். புதிய கல்விக் கொள்கை மூலமாக மாணவர்களுக்கான பாடச்சுமை குறைக்கப்பட்டுள்ளது
தாய்மொழியில் கல்வி கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. நமது நாட்டில் மொழிப்பாடம் என்பது உணர்ச்சிப்பூர்வமானது என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களே தேர்வு செய்யலாம். மனப்பாட முறையிலிருந்து சிந்தனை முறைக்கு புதிய கல்விக் கொள்கை வழி வகுத்துள்ளது என்றார்.