லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், அரசு பள்ளி அமைப்பில் பல்வேறு சீர்த்திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார். மாநில நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், சோனம் வாங்சுக் உட்ப 120 பேரை டெல்லியில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், மத்திய அரசு லடாக்கிற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பழங்குடியின பகுதிகளில் நில பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சோனம் வாங்சுக், தனது ஆதராவாளர்களுடன் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி லடாக்கில் இருந்து தலைநகர் டெல்லியை நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டார்.
காந்தி ஜெயந்தி நாளான நாளை (02-10-24) டெல்லி மகாத்மா காந்தி நினைவிடத்தில் பேரணியை முடிக்க திட்டமிட்டிருந்த சோனம் வாங்சுக்கை, நேற்று இரவு (30-09-24) தீடீரென, டெல்லி சிங்கு எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் மட்டுமில்லாமல், அவருடன் சேர்த்து பேரணியாக வந்த 120 பேரையும் டெல்லி எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்து தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
சோனம் வாங்சுக் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் தடுப்புக்காவலில் வைத்ததற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சோனம் வாங்சுக் மற்றும் நூற்றுக்கணக்கான லடாக்கியர்கள் சுற்றுச்சூழல் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்காக அமைதியான முறையில் அணிவகுத்துச் சென்றபோது அவர்களை தடுப்புக் காவலில் வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. லடாக்கின் எதிர்காலத்திற்காகக் குரல் போராடினார்கள் என்பதற்காக ஏன் முதியோர்களும் டெல்லியின் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்?, விவசாயிகள் எப்படி தங்களின் போராட்டங்கள் மூலம் மோடியின் சக்கரவியூகத்தை உடைத்தார்களோ அது போல் மீண்டும் அந்த சக்கரவியூகம் உடையும், உங்கள் ஆணவமும் உடைந்து விடும். நீங்கள் லடாக்கின் குரலைக் கேட்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பாதயாத்திரை மேற்கொண்டவர்களை போலீசார் திரும்பி செல்லுமாறு கூறியதாகவும், அவர்கள் அதை கேட்க மறுத்ததாலும், அவர்களை டெல்லி எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.