
வங்கதேசத்தில் சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவராக இருக்கும் சின்மய் கிருஷ்ணா தாஸ், வங்கதேசத்தின் தேசியக் கொடி அவமதித்தாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், சின்மய் கிருஷ்ண தாஸ் உள்பட 19பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் சின்மய் கிருஷ்ண தாஸ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சின்மய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் வங்கதேசம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது நடந்த தாக்குதலில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 30க்கும் மேற்பட்டோரை வங்கதேச போலீசார் கைது செய்துள்ளனர். அதே வேளையில், வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக இருக்கக்கூடிய இந்து மக்கள் மீது அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியாவில் உள்ள பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாபர் ஆட்சியில் அயோத்தியிலும், சம்பலிலும் என்ன நடந்ததோ அதுதான் தற்போது வங்கதேசத்திலும் நடைபெறுகிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலில் நேற்று (05-12-24) 43வது ராமாயண மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், “சமூகத்தை பிளவுபடுத்தும் சதிகளை நாம் முறியடித்திருந்தால், இந்த நாடு ஒருபோதும் காலனித்துவமாகியிருக்காது. நமது வழிபாட்டுத் தலங்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்காது. ஆனால் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்துபவர்கள் வெற்றியடைந்துள்ளனர். சாதியின் பெயரால் பிரிவினைகளை உருவாக்கி சமூக ஒற்றுமையை சிதைப்பவர்களின் மரபணுக்கள் இன்றுவரை தொடர்கின்றன.
பாபரின் ஆட்சியில் அயோத்தியிலும், சம்பலிலும் என்ன நடந்ததோ, இன்று வங்கதேசத்தில் நடக்கிறது. அவர்களின் இயல்பும், மரபணுக்களும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. அவர்கள் உங்களைப் பிரித்து வெட்டத் தயாராகிறார்கள். இந்த பிரிவினைவாதிகளுக்குப் பல நாடுகளில் சொத்துக்கள் உள்ளன. பிரச்சனை என்றால் அவர்கள் ஓடிவிடுவார்கள், மற்றவர்கள் இறந்துவிடுவார்கள்” என்று தெரிவித்தார்.