மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாஜகவினருக்கும் , திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு, பயங்கர வன்முறையாக மாறியது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் அமித்ஷாவின் பேரணிக்கு கருப்பு கொடி காட்டியும் , "அமித்ஷா திரும்பிப்போ" என்ற பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். பாஜக பேரணி மாணவர்களின் பல்கலைக்கழக விடுதியை நெருங்கிய போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் பேரணி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் பெரிய வன்முறையாக மாறியது.
இதனையடுத்து இன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் நேற்று நடந்த வன்முறை காரணமாக இன்றைய கூட்டத்தை ரத்து செய்தார் யோகி. இதுபோல கூட்டங்களை ரத்து செய்ய வேண்டாம் எனவும், திட்டமிட்டபடி அனைத்து கூட்டங்களும் நடைபெற வேண்டும் எனவும் யோகியை அமித் ஷா தற்போது வலியுறுத்தியுள்ளார்.