இந்திய பிரதமர் மோடி நாட்டில் நிலவும் கரோனா நிலை தொடர்பாகவும், கரோனா தடுப்பூசிகள் தொடர்பாகவும் நேற்று (07.06.2021) நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது தடுப்பூசிகளை மத்திய அரசே மாநிலங்களுக்கு வழங்கும் என்றும், மாநிலங்கள் தனியாக தடுப்பூசியைக் கொள்முதல் செய்ய வேண்டியதில்லை என அறிவித்தார்.
இதன் அடிப்படையில் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு, அந்தக் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் முக்கிய அம்சமாக, மக்கள் தொகை, நோய்ச் சுமை, தடுப்பூசி திட்டத்தில் ஏற்படும் முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தடுப்பூசியை வீணாக்கினால் அது ஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளன.
மேலும், தடுப்பூசி செலுத்துவதில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதிற்கும் மேற்பட்டவர்கள், இரண்டாவது டோஸ் செலுத்தப்பட வேண்டியவர்கள், 18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோர் என்ற வரிசையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், அதில் 18 - 44 வயதுக்கு உட்பட்டோரில் யாருக்கு முதலில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்படும் தடுப்பூசிகளின் விலையைத் தடுப்பூசி உற்பத்தியாளரே தீர்மானிப்பார் என்றும், தனியார் மருத்துவமனைகள் சேவை வாரியாக ஒரு டோஸ்க்கு கூடுதலாக 150 ரூபாய் வரை வசூலிக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.