குஜராத்தில் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள பாஜக, 6-வது முறையாகவும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தீவிரப் பிரச்சாரம் மற்றும் பல யுக்திகளைக் கையாண்டு வருகிறது.
மறுமுனையில், இழந்த தங்களது கௌரவத்தை மீட்டெடுக்க காங்கிரஸ் போராடிக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆம் ஆத்மியின் வருகையால் இருமுனைப் போட்டியாக இருந்த குஜராத் தேர்தல் தற்போது மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், கட்லோடியா சட்டப்பேரவைத் தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் போட்டியிடுகிறார். ஜாம்நகர் வடக்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா போட்டியிடுகிறார். விருகம் தொகுதியில் ஹர்திக் பட்டேல் போட்டியிடுகிறார். இவர் பட்டேல் சமூகத்திற்காகப் போராடி பின்பு காங்கிரசில் இணைந்து முக்கியப் பதவி வகித்த நிலையில் திடீரென பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.