இந்த நவீன உலகில் அனைத்தும் இணையமயம் ஆகிவிட்டது. அந்த வகையில், தங்களுக்கு பிடித்தமான உணவுகளை வீட்டில் இருந்தபடியே செல்போனில் ஆர்டர் செய்து டெலிவரி மூலம் பெறும் முறை அதிகரித்துள்ளது. அதில், இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு டெலிவரி செயலியாக ஜொமேட்டோ இருந்து வருகிறது. இந்த செயலி மூலம், சைவம், அசைவம் உணவுகள் போல் அனைத்தையும் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் டெலிவரி செய்பவர்களாக பணிபுரிபவர்கள், சிவப்பு நிற டி- ஷர்ட் அணிந்தபடி வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை டெலிவரி செய்வார்கள். இந்த நிலையில், ஜொமேட்டோ நிறுவனம், சுத்த சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டும் புதிதாக ‘pure veg mode' மற்றும் ‘pure veg fleet' என்ற சேவையை நேற்று (19-03-24) அறிமுகம் செய்தது. இதனை ஜொமேட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபந்தர் கோயல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த சேவை குறித்து தீபந்தர் கோயல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உலகிலேயே இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய சதவீதத்தை கொண்டுள்ளது. அவர்களிடமிருந்து நாங்கள் பெற்ற மிக முக்கியமான கருத்து என்னவென்றால், அவர்கள் தங்கள் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, அவர்களின் உணவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் அவர்கள் மிகவும் குறிப்பாக இருக்கிறார்கள். அவர்களின் உணவு விருப்பங்களுக்கு தீர்வு காண, 100% சைவ உணவு விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்காக, சொமேட்டோவில் "Pure Veg Fleet" உடன் "Pure Veg Mode"ஐ இன்று அறிமுகப்படுத்துகிறோம்.
Pure veg mode மூலம் சுத்தமான சைவ உணவை மட்டுமே வழங்கும் உணவகங்களின் தொகுப்பைக் கொண்டிருக்கும். அதில், எந்த அசைவ உணவுப் பொருட்களையும் வழங்கும் எந்தவொரு உணவகங்களும் இடம்பெறாது. எங்களின் பிரத்யேக Pure veg fleet ஆப்ஷனில் சுத்தமான வெஜ் உணவகங்களிலிருந்து ஆர்டர்களை மட்டுமே வழங்கும். அதாவது, அசைவ உணவு அல்லது அசைவ உணவகம் வழங்கும் வெஜ் சாப்பாடு, எங்கள் pure veg fleetஇல் பச்சை டெலிவரி பெட்டிக்குள் செல்லாது. இந்த Pure Veg Mode அல்லது Pure Veg Fleet எந்தவொரு மத, அல்லது அரசியல் விருப்பத்திற்கும் சேவையாற்றவோ அல்லது அந்நியப்படுத்தவோ இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்” என்று தெரிவித்திருந்தார். சுத்த சைவ உணவுகளை டெலிவரி செய்யும் பணியாட்கள், பச்சை நிற உடை அணிந்து, பச்சை நிற பையில் வைத்து டெலிவரி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய சேவைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜொமேட்டோ செயலியை அன் இன்ஸ்டால் செய்து அதன் ஸ்க்ரீன்ஷாட்டை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், சைவ உணவு பிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கான பச்சை உடை பிரிவை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஜொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபந்தர் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சுத்த சைவ உணவு பிரியர்களுக்காக பிரத்யேக பிரதிநிதிகளை நாங்கள் பயன்படுத்தும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பச்சை நிற ஆடை கட்டுப்பாடு திரும்பப் பெறப்படுகிறது. சொமேட்டோவின் அனைத்து டெலிவரி பிரதிநிதிகளும் ஒரே மாதிரியான சிவப்பு நிற உடையே அணிவார்கள்.
இதன் மூலம், சைவ ஆர்டர்களுக்கான வெளித்தோற்றத்தை அடையாளம் காண முடியாது. எங்களின் சிவப்பு நிற சீருடை டெலிவரி பிரதிநிதிகள், அசைவ உணவுடன் தவறாக தொடர்பு கொள்ளாமல் இருப்பதையும், எந்த விசேஷ நாட்களில் சமூகத்தால் தடுக்கப்படுவதையும் இது உறுதி செய்யும். எங்கள் பிரதிநிதிகளின் உடல் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எங்கள் வாடிக்கையாளர்களில் சிலர் கூட தங்கள் நில உரிமையாளர்களுடன் சிக்கலில் சிக்கக்கூடும் என்பதை நாங்கள் இப்போது உணர்ந்துள்ளோம், அது எங்களால் நடந்தால் அது ஒரு நல்ல விஷயமாக இருக்காது. நேற்றிரவு இதைப் பற்றி பேசிய அனைவருக்கும் நன்றி. இந்த வெளியீட்டின் எதிர்பாராத விளைவுகளை எங்களுக்குப் புரிய வைத்தீர்கள். தேவையற்ற அகங்காரமோ, பெருமிதமோ இல்லாமல் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.