Skip to main content

“மூன்று மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு” - ராமதாஸ்

Published on 26/03/2025 | Edited on 26/03/2025

 

Tamil Nadu lost Rs. 8000 crore investment in three months says  Ramadoss

தமிழ்நாட்டுக்கு வந்துள்ள  தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ரூ.8000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த  இரு வெளிநாட்டு நிறுவனங்கள்,  தமிழகத்தில் சாதகமான சூழல் இல்லை என்று கூறி, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில்  முதலீடு செய்ய முடிவு செய்திருக்கின்றன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு சிறந்து  விளங்குவதாக  திமுக அரசு கூறி வந்த நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையே  இது காட்டுகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட  கேரியர் என்ற உலகின் முன்னணி குளிரூட்டி நிறுவனம் அதன் உற்பத்தி மையத்தை சென்னை புறகரில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது  சென்னைக்கு மிக அருகில் உள்ள ஆந்திரத்தின்  ஸ்ரீ சிட்டி  பகுதியில் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் ஆந்திர அரசுடன் விரைவில் கையெழுத்திடவுள்ளது. அதேபோல், தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி நிறுவனம் தென்னிந்தியாவில்  ரூ. 5000 கோடி மதிப்பில் அதன் முதல் உற்பத்தி மையத்தை  தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தை விட ஆந்திரத்தில் தான் முதலீட்டு சூழல் சிறப்பாக இருப்பதாகக் கூறி அங்கு முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. அதனால், அதற்கு உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் 6  நிறுவனங்களும்  ரூ.2000 கோடி மதிப்பிலான தங்களின் உற்பத்தி ஆலைகளை ஸ்ரீசிட்டியில் அமைக்க முடிவு செய்துள்ளன.

தொழில் தொடங்குவதற்கான அனுமதி ஆந்திரத்தில் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதால் தான் இந்த நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன.  தமிழ்நாட்டில்  தொழில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்கள்  அதற்கான அரசின் அனுமதியையும்,  ஒப்புதலையும்  பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவை உண்மை என்பதை தமிழ்நாட்டுக்கு வந்திருக்க வேண்டிய  இரு முதன்மை நிறுவனங்களும், 6 துணை நிறுவனங்களும் ஆந்திராவுக்கு சென்றிருப்பது காட்டுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு  முதலீடுகளை ஈர்க்கும் திறன் தமிழ்நாட்டுக்கு குறைந்து வருகிறது என்பது தான் உண்மை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை தமிழக அரசு செய்யவில்லை என்பது தான் இதற்குக் காரணம் ஆகும்.

ஆனால்,  திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலீடுகள் குவிவதைப் போன்றத் தோற்றத்தை ஏற்படுத்த  திமுக அரசு   முயன்று வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில்  ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான முதலீடுகள் வந்திருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால்,  அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் அதை செய்ய திராவிட மாடல் அரசு மறுக்கிறது. எனவே, பயனற்ற செய்வதை விடுத்து  தமிழ்நாட்டில்  தொழில் தொடங்குவதற்கு  உகந்த சூழலை  ஏற்படுத்தி, வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு  மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள  தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்