
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பவன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு போடப்பட்டது. தங்களுக்கு எதிராக போடப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு சமமாகாது என்றும், போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளுடன் சேர்த்து, ஐபிசி பிரிவு 354 மற்றும் 354-பி ஆகியவற்றின் விதிகளின் கீழ் வர வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, ‘குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது, அவரின் ஆடைகளை கலைத்து இழுக்க முயற்சிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகளாகாது’ எனத் தெரிவித்து அவர்கள் மீது போடப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கை மாற்றி அமைக்க உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையாக மாறியது.
சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி ஆர் கவாய், ஏ.ஜி.மாஷிஹ் ஆகியோர் அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘நீதிபதியின் இந்த கருத்துக்கள் நீதிபதியின் திறன் குறைபாட்டை காட்டுகிறது. இந்த தீர்ப்பு மனிதாபிமானமற்ற அணுகுமுறையைக் காட்டுகிறது. ஒரு நீதிபதிக்கு எதிராக இப்படி சொல்வதற்கே வேதனையாக உள்ளது. அலகாபாத் நீதிபதி தனது தீர்ப்பில் கடினமான வார்த்தையை பயன்படுத்தியதற்கு வருந்துகிறோம்’ எனக் கருத்து தெரிவித்ததோடு, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.