பிரதமர் நரேந்திர மோடி, இன்று (14.09.2021) உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜ மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான இடமாக மாறிவருவதாக தெரிவித்தார்.
பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசியது வருமாறு,
“அலிகார் மற்றும் மேற்கு உ.பி.க்கு இது மிகப்பெரிய நாள். ராதா அஷ்டமி விழா இந்த நாளை மேலும் புனிதமானதாக்குகிறது. உங்கள் அனைவருக்கும் ராதா அஷ்டமி வாழ்த்துகள். முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் இல்லாத வெறுமையை உணர்கிறேன். ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.
நவீன கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், போர் விமானங்கள், ட்ரோன்கள், போர்க் கப்பல்கள் என அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதை இன்று உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்களுக்கும் உத்தரப்பிரதேசம் கவர்ச்சிகரமான இடமாக மாறிவருகிறது. வளர்ச்சிக்கு சரியான சூழல் உருவாக்கப்படும்போது இது நிகழ்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கி யோகி அரசு செயல்பட்டுவருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசும் யோகி அரசும் இணைந்து செயல்படுகின்றன. மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். நிர்வாகம், குண்டர்களால் நடத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆட்சி, ஊழல்வாதிகளின் கைகளில் இருந்தது. ஆனால் இப்போது அப்படிப்பட்டவர்கள் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள். யோகி ஆட்சியில் குற்றவாளிகள் ஒரு குற்றத்தை செய்ய இருமுறை யோசிக்கிறார்கள்.
யோகிஜியின் தலைமையில் உத்தரப்பிரதேசம் இதுவரை 8 கோடி தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. ஒரே நாளில் அதிக அளவு தடுப்பூசிகளை செலுத்திய சாதனையும் உத்தரப்பிரதேசத்திடம்தான் உள்ளது.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.