ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான இயக்கத்தில் பங்குபெற பா.ஜ.க விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளார் அண்ணா ஹசாரே.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக இயக்கம் ஒன்றை உருவாக்க பா.ஜ.க முயன்றுவருகிறது. அந்தவகையில், இந்த இயக்கத்தில் அண்ணா ஹசாரேவும் பங்கேற்க வேண்டும் என டெல்லி பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள அண்ணா ஹசாரே, டெல்லி பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. உலகின் மிகப்பெரியது என்று கூறும் ஒரு கட்சி, பலம் மற்றும் பணம் இல்லாத 83 வயதான ஃபக்கீரை இந்த இயக்கத்திற்கு அழைப்பது துரதிர்ஷ்டவசமானது. ஊழலை ஒழிக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். டெல்லி அரசு ஊழலில் ஈடுபட்டிருந்தால் உங்கள் அரசாங்கம் ஏன் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை? ஊழல் இல்லாத நாடு என்று உறுதியளித்து 2014 -இல் உங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஆனால் மக்கள் எந்த நிம்மதியையும் உணரவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்ற கட்சிகளில் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதை மட்டுமே செய்து வருகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார். அண்ணா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான இயக்கம், மத்தியில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்ட நிலையில், அதேபோன்ற ஒரு இயக்கத்திற்கு பா.ஜ.க விடுத்த அழைப்பை தற்போது நிராகரித்துள்ளார் அண்ணா ஹசாரே.