பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது பாஜக வின் தேசிய தலைவர்களுக்கு ரூ. 1,800 கோடி பணம் கொடுத்ததாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. வருமான வரித்துறையிடம் உள்ள அவரது டைரியில் உள்ள குறிப்புகளை கொண்டு காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது.
![yeddyurappa diary is the biggest joke said raghavendra](http://image.nakkheeran.in/cdn/farfuture/cQxQjyRL7NTZSHLWilCF9cQIdbOdljPM5A6HwJcPFq8/1553349178/sites/default/files/inline-images/ragavendtra-std.jpg)
அந்த டைரியில் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களின் பெயரும் உள்ளதாக கூறி அந்த டைரியின் நகல்கள் என சில ஆவணங்களை காங்கிரஸ் வெளியிட்டது. இதற்கு பதிலளித்த எடியூரப்பா, “இது அனைத்தும் காங்கிரஸ் தலைவர்களின் திவாலான ஐடியாக்கள்தான்,” என பதிலளித்தார்.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து பதிலளித்துள்ள எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா கூறுகையில், "இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை இந்த டைரி விவகாரம் தான். ஏனென்றால் எனது தந்தைக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது. அதுமட்டுமின்றி டைரியின் அனைத்து பக்கங்களிலும் யாரவது கையெழுத்து போடுவார்களா, அல்லது டைரியை தயாரிப்பவர்கள் அனைத்து பக்கங்களிலும் கையெழுத்துக்கு என தனி இடம் வைத்திருப்பார்களா? என கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் முறையான விசாரணை தேவை என பாஜக கூறியுள்ளதாக தெரிவித்தார்.