ஓடும் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயில் ( ரயில் எண் : 12956) மும்பை அருகே உள்ள பால்கர் என்ற ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் (RPF) ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் அங்கிருந்து தப்பிக்க முயன்ற ரயில்வே பாதுகாப்பு படை வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேற்கு ரயில்வே சார்பில், “ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்ததும் ஆர்.பி.எப். காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஆர்.பி.எப். ஏ.எஸ்.ஐ. மற்றும் மூன்று பயணிகளை சுட்டுவிட்டு தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்தார். குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிள் அவரது ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கையில், “ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஏஎஸ்ஐ உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.