நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தன் மனைவி, அதிமுக கட்சியினருடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருடைய கணவர் தமிழ்வேந்தனின் முகமூடியை அணிந்தபடி அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''அதிமுகவில் ஒரு புதிய வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். ஒரு இளைஞருக்கு வேட்பாளராக வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அவருக்கு 34 வயது தான் ஆகிறது. அவர் என்னுடைய கணவர் என்பதை விடவும், இளைஞர் ஒருத்தர் தேர்தலில் நிற்கிறார் என்பதே முக்கியம்.
அவங்களோட வாக்குறுதிகள் இன்னும் எல்லாருக்கும் போய் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக நான் வந்திருக்கிறேன். போதைப்பொருளை ஒழிப்பதும், கல்வியை அனைவருக்கும் சமமாக்குவது என்பதுதான் அவருடைய இலக்காக இருக்கிறது. அவருக்கு சப்போர்ட்டாக இங்கு நான் வந்து இருக்கேன். மக்களுக்கு நல்லாவே தெரியும் ஆட்சியில் இருக்கின்ற பாஜகவாக இருக்கட்டும் எதிர்க்கட்சியாக இருக்கட்டும் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. அவர்களுக்கு எதுக்கு இன்னொரு வாய்ப்பு. ஆட்சிக்கு வரும்போது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால் எதுவும் செய்யவில்லை. அதனால் தான் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியாக இருக்கட்டும் அன்பழகனாக இருக்கட்டும் அவர்கள் ஒரு நல்ல வாய்ப்பை எனது கணவருக்கு கொடுத்துள்ளார்கள்''என்றார்.