![su venkatesan](http://image.nakkheeran.in/cdn/farfuture/AW5Ldq9Md38za-5l4LpKG8Ylxny1oL_N84SDaNLp2wk/1640076984/sites/default/files/inline-images/EGTEFR.jpg)
எவ்வளவு வருமானம் வரும் எனத் தெரியாமலேயே, 400 ரயில்வே நிலையங்களை மத்திய அரசு தனியாருக்குக் குத்தகைக்கு விடப்போவதை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தனது கேள்வி மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய பணமாக்கல் (national monetisation pipeline) திட்டத்தை முறைப்படி ஆரம்பித்துவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் குறைவாகப் பயன்படுத்தப்படும் அரசு சொத்துகள், குத்தகைக்குவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் ரயில்வே நிலையங்கள் குத்தகைக்கு விடப்பட இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மறுமேம்பாட்டிற்காக 4 ஆண்டுகளில் 400 ரயில்வே நிலையங்கள் ‘தேசிய பணமாக்கல்’ திட்டத்தின் கீழ் குத்தகைக்கு விடப்படும் எனவும், அதனால் அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை தற்போது மதிப்பிடுவது கடினம் என தெரிவித்துள்ளார்.
![LOK SABHA](http://image.nakkheeran.in/cdn/farfuture/N54WxDtvVISUuyJxCb13s0v-YxgAhqJ-rCqaN4uNV9Y/1640077200/sites/default/files/inline-images/DFRE.jpg)
ரயில்வே அமைச்சரின் இந்தப் பதிலை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு (எண் 1707) பதில் அளித்துள்ள ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், 4 ஆண்டுகளில் 400 ரயில்வே நிலையங்கள் ‘தேசிய பணமாக்கல்’ திட்டத்தின் கீழ் தனியார் வசம் ‘மறு மேம்பாடுக்காக’ ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனால் அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கக் கூடும் என்ற கேள்விக்கு 'மறு மேம்பாடு வாயிலாக எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை இப்போது மதிப்பிட இயலாது’ என்று பதில் அளித்துள்ளார். திட்டத்திற்குப் பெயர் 'பணமாக்கல்’, ஆனால் எவ்வளவு பணம் ஆகும் என தெரியாது என்ற அமைச்சர் பதில் வியப்பாக இருக்கிறது. ஆனால் இத்திட்டத்தால் லாபம் அடையப்போகும் தனியார்கள் நன்கு அறிவார்கள் எவ்வளவு அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் என்று" என கூறியுள்ளார்.