மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை மீண்டும் எடுத்துள்ளார். அதில் பாஜக கட்சியின் வெற்றி ஊர்வலங்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தில் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார் மம்தா. மேலும் பாஜகவினர் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் பிரச்சனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மேற்கு வங்க மாநில காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் 'நிர்மல்'-யை இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 'நிர்மல்' சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி, பாஜக கட்சியில் உள்ள சில எதிரிகளால் நிர்மல் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்தார். அதற்காக தான் பாஜகவின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தடை என மம்தா விளக்கம் அளித்தார். முதல்வரின் குற்றச்சாட்டை மறுத்த அம்மாநில பாஜக தலைவர் ராகுல் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசலே காரணம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. 2014- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு தொகுதிகளை மட்டுமே பாஜக கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது ஆளும் கட்சிக்கு சரி சமமான தொகுதிகளை பாஜக கட்சி கைப்பற்றி உள்ளதால் முதல்வர் மம்தா அதிர்ச்சியடைந்தார். அதே போல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2021- ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மம்தா பானர்ஜி கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது ஆந்திர மாநிலத்தின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி அரசியல் ஆலோசகராக உள்ளார். அதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வரின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் பணியாற்ற உள்ளார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் வெற்றியைத் தொடர்ந்து மம்தாவிற்கு வெற்றி வாய்ப்பை பெற்று தர பிரசாந்த் கிஷோர் முடிவு செய்துள்ளார். இவர் ஓரிரு மாதங்களில் மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்று மம்தாவிற்கு அரசியல் ஆலோசனை வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பிரதமருக்கு கடிதம். கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என தெரிவித்துள்ளார்.