பிரதமர் மோடியை வெடிக்குண்டு வைத்து கொலை செய்யப்போவதாக போலீசாருக்கு வந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை போக்குவரத்து ஹெல்ப்லைனில் இன்று (07-12-24) வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் ஒன்று வந்தது. அதில், இரண்டு ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் மற்றும் பிரதமர் மோடியை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்று மிரட்டல் வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், செய்தி அனுப்பப்பட்ட எண், ராஜஸ்தானில் உள்ளா அஜ்மீரில் இருந்து வந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க உடனடியாக போலீஸ் குழு ஒன்று அமைத்து தேடி வருகின்றனர். இதற்கிடையில், செய்தி அனுப்பியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது, மதுபோதையில் இருந்திருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மும்பை போக்குவரத்து காவல்துறையின் ஹெல்ப்லைனுக்கு கடந்த காலங்களில் பலமுறை புரளி மிரட்டல் செய்திகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.