இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் படுவேகமாக நடைபெற்றுவருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக டெல்லிக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
டெல்லியில் அவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்தார். திமுக எம்.பி. கனிமொழியும் மம்தாவை டெல்லியில் சந்தித்தார். இந்தநிலையில் நேற்று (30.07.2021) தனது ஐந்து நாள் பயணத்தை முடித்துக்கொண்டு மம்தா, மேற்கு வங்கதிற்குத் திரும்பினார்.
டெல்லியில் இருந்து புறப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, தனது பயணம் வெற்றிகரமாக இருந்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "இன்று, நான் சரத் (பவார்) ஜியிடமும் பேசினேன். அவர் தற்போது மும்பை சென்றுள்ளார். அடுத்தமுறை அவரையும் நான் சந்திப்பேன். எனது பயணம் வெற்றிகரமாக அமைந்தது. நாங்கள் அரசியல் நோக்கங்களுக்காகவும் வளர்ச்சி நோக்கங்களுக்காகவும் சந்தித்தோம். ஜனநாயகம் தொடரும் என நம்புவோம். ஜனநாயகத்தைக் காப்பாற்ற, அனைவரும் இணைந்து செயல்படுவோம். ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், நாடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை டெல்லி வரப்போவதாக தெரிவித்துள்ள மம்தா, எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவது குறித்தும் பேசினார். இதுதொடர்பாக அவர், "(எதிர்க்கட்சிகள்) அரசியல் ஒற்றுமையை அடைந்து கைகோர்த்தால், அதைவிட சிறப்பாக எதுவும் இருக்காது. என்னால் இந்தமுறை அனைத்து தலைவர்களையும் சந்திக்க முடியவில்லை. ஆனால் பல தலைவர்களைச் சந்தித்தேன். இந்த சந்திப்புகளின் முடிவு நன்றாக இருந்தது. நாங்கள் ஒன்றாக பணியாற்றுவோம். நாம் நாட்டைக் காக்க வேண்டும்" என கூறினார்.