கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கு பிந்து என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நவீனின் மனைவி பிந்து, எச்.எஸ்.ஆர் லே- அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று, பிந்து செல்போனில் அலுவலக வேலை தொடர்பாக தனது ஆண் ஊழியருடன் பேசிக் கொண்டிருந்தார். பிந்து நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த நவீன், பிந்துவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நவீன், வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து பிந்துவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த பிந்து, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடி வந்துள்ளார். பிந்துவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், நவீன் வீட்டுக்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிந்துவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புட்டேனஹள்ளி போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பிந்து பணி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அலுவலக வேலை தொடர்பாக தனது ஆண் ஊழியரை வீட்டில் அழைத்து வந்து பேசி வந்துள்ளார். இதில், பிந்துவின் நடத்தை மீது சந்தேகமடைந்த நவீன், அடிக்கடி பிந்துவிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று அந்த ஆண் ஊழியருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியதால் ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் பிந்துவை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.