அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அயோத்தி பிரச்சனைக்காகவும், அது சார்ந்த பணிகளுக்காகவும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்தவர்களுக்கு இது சமர்ப்பணம். அதேபோல இந்த பணியில் எங்களை ஈடுபடுத்தி உழைப்பை தரக் காரணமாக இருந்த அத்வானிக்கு சமர்ப்பணம்’’ எனக் கூறியுள்ளார்.