நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் இன்று (08/12/2021) பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்துள்ளார். இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவியும், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (வயது 63) மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவத்தினர் உயிரிழப்புக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், பிபின் ராவத் மிக முக்கியமான பதவியில் இருந்ததால் அவரது இடத்தில் யாரை நியமிப்பது என்பது குறித்தும் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.