டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசாடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக இன்று (13-05-24) காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, ‘டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரால் தாக்கப்பட்டேன்’ எனப் புகார் தெரிவித்திருக்கிறார்.
அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தை அடைந்த போது அங்கு எம்.பி.ஸ்வாதி மாலிவால் இல்லை என்று கூறப்படுகிறது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.