நாட்டின் 76வது குடியரசு தின விழா நேற்று (26.01.2025) கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் தலைநகரான டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்புகள் நடைபெற்றது.
நாடே குடியரசுத் தின விழாவை கொண்டாடிய அதே வேளையில், அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சிலையை ஒருவர் சுத்தியலால்தாக்கி சேதப்படுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது. 76வது குடியரசுத் தினத்தையொட்டி, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பி.ஆர்.அம்பேத்கரி உருவச் சிலையை ஒருவர் சுத்தியலால் தாக்கி சேதப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், அம்பேத்கர் சிலை அருகே இருந்த நீண்ட இரும்பு ஏணியைப் பயன்படுத்தி ஒரு நபர் ஏறி அம்பேத்கர் சிலை மீது சுத்தியலால் அடித்து சேதப்படுத்துகிறார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக, மோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.