குடிகாரக் கணவர்களால் மனமுடைந்து போன இரண்டு பெண்கள், வீட்டை விட்டு வெளியேறி ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பரைச் சேர்ந்த கவிதாவுக்கும், குஞ்சா என்ற பப்லுவுக்கும் இடையே இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நல்ல தோழிகளான இவர்கள், தங்களின் கணவர்கள் தங்களை குடித்துவிட்டு அடித்து கொடுமைப்படுத்தும் செயல்களை தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளனர். கணவர்களின் செயல்களால் அவர்களை வெறுத்த இந்த இரண்டு பெண்கள், ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, இரண்டு பெண்களுமே தங்களது வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 24ஆம் தேதி தியோரியாவில் உள்ள சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். கவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்த குஞ்சா, அதன் பின்னர் இருவரும் மாலைகளை மாற்றி கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய குஞ்சா, ‘எங்கள் கணவர்களின் குடிப்பழக்கம் மற்றும் தவறான நடத்தையால் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். இது அமைதி மற்றும் அன்பான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க எங்களைத் தள்ளியது. நாங்கள் கோரக்பூரில் ஒரு ஜோடியாக வாழ முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களைத் தக்கவைக்க வேலை செய்ய முடிவு செய்துள்ளோம்’ என்று கூறினார்.
தாங்கள் ஒன்றாக இருப்பதில் உறுதியாக இருப்பதாகவும், தங்களை யாரும் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அந்த பெண்கள் தெரிவித்தனர். இவர்களுக்கு தற்போது நிரந்தர வீடு இல்லையென்றாலும், வாடகைக்கு வீடு எடுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.