பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘பாட்டல் ராதா’படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் அதில் மிஷ்கின் கலந்து கொண்டு முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாகவும் மதுவை ஆதரிக்கும் வகையிலும் சில விஷயங்கள் பேசியிருந்தார். இது அந்த நிகழ்ச்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்பு அவரது பேச்சுக்கு கண்டனங்களும் எழுந்தது. மேலும் அவரின் பேச்சை மேடையில் இருந்த பா.ரஞ்சித், அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குநர்கள் கண்டிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் மிஷ்கின் தன் பேச்சிற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். வெற்றிமாறன் வழங்கும் ‘பேட் கேர்ள்’ பட டீசர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் கலந்து கொண்டு பேசுகையில், “ஒரு நகைச்சுவை சொல்லும் போது அதை சிரிக்கிறவங்க ஆழ்மனசுல இருந்து தான் சிரிப்பாங்க. அந்த மேடையில் அதுதான் நடந்தது. அமீரிடமும் வெற்றிமாறனிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் என் பேச்சிற்கு சிரித்தார்கள் என நிறைய பேர் திட்டினார்கள். அவர்களை விட மேடையில் இருந்த எல்லாரும் கீழே இருந்த பத்திரிக்கையாளர்கள் நிறைய பேர் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
நான் நகைச்சுவையாக தான் பேசினேன். ஒரு சில வார்த்தைகள் எல்லை மீறி போய்விட்டது. மனதில் இருந்து பேசும்போது அப்படி வந்துவிட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார். மேலும் பாடலாசிரியர் தாமரை, இயக்குநர் லெனின் பாரதி, இயக்குநர் சசி, தயாரிப்பாளர் தானு ஆகியோரிடமும் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.