டெல்லி காஜிபூரில், ஒரு சூட்கேஸுக்குள் ஒரு பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் இருந்ததாகக் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், நள்ளிரவு 1:30 மணி முதல் 2 மணியளவில் உடல் எரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அந்த பகுதியில் கடந்து செல்லும் வாகனங்களை கண்காணித்ததில், லோனியில் வசிக்கும் அமித் திவாரி தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதன் பேரில், அமித் திவாரி மற்றும் அனுஜ் குமார் ஆகிய இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
உயிரிழந்த ஷில்பா வீட்டை விட்டு வெளியேறி, உறவினரான அமித் திவாரியுடன், கடந்த நவம்பர் மாதம் முதல் லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். அமித் திவாரி டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். ஷில்பா, திவாரியை தனது குடும்பத்தை விட்டு வெளியேறி தன்னுடன் நிரந்தரமாக வாழுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இல்லையென்றால், திவாரி குடும்பத்தினர் பற்றி போலீசாரிடம் பொய் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார். இதனால் திவாரிக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று திவாரி மது அருந்தியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திவாரி, ஷில்பாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், அனுஜ் குமார் உதவியுடன் ஷில்பாவின் உடலை திவாரி காரில் ஏற்றிச் சென்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உடலை அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், குடியரசு தினத்தையொட்டி காவல்துறையினரின் கடுமையான சோதனைகளால், இருவரும் பெண்ணின் உடலை காஜிபூர் அருகே வைத்து தீ வைத்து எரித்து அங்கிருந்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.