புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சப்டிவிசனில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கற்றல்திறன் குறைபாடுடையவர். இவர் கடந்த திங்கள் கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். மாலை வரை வீடு வரவில்லை என்பதால் பல இடங்களிலும் தேடிய உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
போலீசாரும் ஆங்காங்கே உள்ள கண்காணிப்புக் கேமராக்களை பார்த்து தேடி வந்தனர். செவ்வாய்க் கிழமை இரவு 8 மணிக்கு அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தனியாக நின்றதை அவரது உறவினர்கள் பார்த்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமி கூறும் போது, வீட்டில் இருந்து ஒரு பேருந்தில் வந்து அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இறங்கி நின்ற போது அந்த பகுதியில் நின்ற ஒருவன் தன்னிடம் சிரித்துப் பேசி அழைத்துச் சென்று தனியாக ஒரு கோழிப்பண்ணையில் தங்க வைத்து உடம்பில் ஆங்காங்கே தொட்டான் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி கூறிய அந்த நபர் முதுகாடு கிராமத்தைச் சேர்ந்த துரைராசு மகன் பெரியசாமி (19) எலக்ட்ரீசியன் வேலை செய்வதும் தெரிய வந்தது. பெரியசாமியை அழைத்து வந்து விசாரணை செய்த போது பேருந்து நிலையத்தில் நின்ற அந்த சிறுமி என்னைப் பார்த்து சிரித்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். எனக்கு அம்மா அப்பா இல்லை பெரியம்மா வீட்டில் இருக்கிறேன் என்று சிறுமி சொன்னார். அதன் பிறகு எங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று ஒரு கோழிப்பண்ணையில் தங்க வைத்தேன். இரவில் பாலியல் சீண்டல்களிலும் ஈடுபட்டேன். அந்த சிறுமியின் தோட்டை வாங்கி ரூ.3000 க்கு அடகு வைத்து ரூ.1500 அந்த சிறுமியிடம் கொடுத்துவிட்டு மீதி ரூ.1500 பணத்துடன் மீண்டும் அறந்தாங்கி பேருந்து நிலையம் சென்றேன். இதேபோல நின்ற மற்றொரு சிறுமியையும் புதுக்கோட்டை வரை அழைத்துச் சென்று மீண்டும் கொண்டு வந்து விட்ட பிறகு முதலில் கோழிப்பண்ணையில் தங்க வைத்திருந்த சிறுமியுடன் இரவில் தங்கிவிட்டு மறுநாள் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டேன். இதேபோல தனியாக வரும் சிறுமிகளை அடிக்கடி வெளியில் அழைத்துச்சென்று சந்தோசமாக இருப்பேன் என்று கூறியதும் விசாரணையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் இதே காவல் நிலையத்திற்கு உட்பட்ட மற்றொரு கிராமத்தில் ஒரு வீட்டில் பேன் ரிப்பேர் செய்யச் சென்ற தஞ்சை மாவட்டம் படப்பனார்வயல் கிராமத்தைச் சேர்ந்த ராமசுந்தரம் மகன் தமிழ்செல்வன் (27) எலக்ட்ரீசியன் பேன் ரிப்பேர் செய்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் மூளை வளர்ச்சி குறைபாடுடைய பெண் தனியாக இருப்பதைப் பார்த்து அந்த வீட்டிற்குள் சென்று அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளான். இதை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து உறவினர்கள் கொடுத்துள்ளனர். இதையடுத்து கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாரதி வழக்கு பதிவு செய்து சிறுமி உள்பட இரு மாற்றுத்திறனாளிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த 2 எலக்ட்ரீசியன்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
ஒரே காவல் சரகத்தில் சில நாட்களில் மாற்றுத்திறனாளி சிறுமி உட்பட இரு பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.