மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் `எல்2; எம்புரான்' என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது.
இப்படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதையொட்டி கொச்சியில் நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினரோடு இயக்குநர் மகிழ் திருமேனியும் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசுகையில் மோகன்லால் குறித்தும் பிரித்விராஜ் குறித்தும் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா குறித்தும் பேசினார்.
பின்பு அஜித் குறித்து பேசுகையில், “பத்மபூஷன் அஜித் சார். அவரை மிஸ் செய்கிறேன். அவர் கை கொடுத்து தூக்கு விட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன். அதை சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் என் மீது தனிப்பட்ட முறையில் காட்டிய அன்பிற்கும் நன்றி. நானும் பிப்ரவரி 6ஆம் தேதிக்கு காத்துக்கொண்டிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.