சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்நிலையில் கருங்குழி- பூஞ்சேரி இடையில் புதிதாக 32 கிலோமீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை-திண்டிவனம் நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு- திண்டிவனம் இடையே நாள் ஒன்றுக்கு 65 ஆயிரம் கார்களுக்கு மேலாக பயணிக்கிறது. தாம்பரம்-திண்டிவனம் இடையே சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான கார்கள் பயணப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் போக்குவரத்து நெரிசல் என்பது கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாற்று வழியாக தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இசிஆர் சாலையில் பூஞ்சேரி பகுதியிலிருந்து கருங்குழி வரை இணைக்கும் வகையில் 32 கிலோமீட்டர் புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.