மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 32 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது.
அதே சமயம், பீகாரில் முதல்வராக பொறுப்பு வகித்து வரும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களை கைப்பற்றியது. ஆனால், தேர்தல் முடிந்த சில மாதங்களுக்கு பிறகு, ஐக்கிய ஜனதா தளம் 5 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவுக்கு மாறி ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்தனர். அதனால், பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில், நிதிஷ் குமாரின் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளது. அதன்படி, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மணிப்பூரில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ அப்துல் நசீர் இனி எதிர்க்கட்சியாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு எம்.எல்.ஏவுக்கான ஆதரவை ஐக்கிய ஜனதா தளம் திரும்பப் பெறுவதால் மணிப்பூர் பா.ஜ.க அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தியா அளவில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இணைந்து வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.