மதுரை மாவட்டத்தில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி உத்தரவாதம் அளித்ததற்காக இன்று அரிட்டாபட்டி கிராம மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததோடு அரிட்டாபட்டிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கிடையே, கிராம மக்கள் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அரிட்டாபட்டி கிராம மக்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நான் முதல்வராக இருக்கும் வரை இந்த திட்டத்தை உறுதியாக வர விட மாட்டேன் என்று ஆணித்தரமாகச் சொன்னார். அவர் சொன்ன வார்த்தைகளே எங்களுக்கு மிகத் திருப்தியாக இருந்தது. அதற்குப் பின்னால் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அனைத்துக் கட்சி ஆதரவினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு அந்த திட்டத்தைக் கைவிடும் எண்ணத்தை உண்டாக்கியதே முதல்வர்தான். அதற்குப் பின்னால் நாங்கள் எல்லாம் ஒன்று கூடி அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத வேறுபாடு இன்றி ஒன்று கூடி பல போராட்டங்களை செய்தாலும் கூட மத்திய அரசு கடைசியில் தான் இசைந்தது. நாங்கள் அனைவரும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதற்கு காரணமாக இருந்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கிறோம். மனமார்ந்த நன்றியை முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் தெரிவித்தோம். எங்கள் பகுதிக்கு நீங்கள் வரவேண்டும். இவ்வளவு பெரிய காரியத்தை செய்த உங்களை எங்கள் ஊருக்கு வரவழைத்து பாராட்ட வேண்டும் என்று சொன்னோம். வருகிறேன் என்று சொல்லிவிட்டார். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி'' என்றனர்.