நாட்டின் 76வது குடியரசு தின விழா நேற்று (26.01.2025) கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் தலைநகரான டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், அரசு பள்ளி ஒன்றில் குடிபோதையில் தேசியக் கொடியை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார், மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், மினாபூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அந்த விழாவின் போது, தேசியக் கொடியை ஏற்ற அப்பள்ளி தலைமை ஆசிரியர் சஞ்சய் குமாரை, சக ஆசிரியர்கள் மேடைக்கு அழைத்தனர்.
குடிபோதையில் இருந்த சஞ்சய் குமார், தடுமாறி தள்ளாடிக் கொண்டு மேடைக்கு வந்து தேசியக் கொடியை மிகவும் சிரமப்பட்டு ஏற்றினார். இவரின் நிலைமையை கண்ட அந்த கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், சஞ்சய் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்வதற்கு முன்பாக சஞ்சய் குமார் கூறியதாவது, “நான் உதவியற்ற நிலையில் குடிக்கிறேன். ஐந்து மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மதிய உணவுக்கும் எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. நான் இந்த இடத்தை எப்படி வாழ்கிறேன், நடத்துகிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் கடனில் இருக்கிறேன். நான் என் வீட்டையும் இந்தப் பள்ளியையும் எப்படி நடத்துகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்” என்று கூறினார். பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.