பட்டியலின இளைஞர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், சூர்யாபேட் மாவட்டத்தில் உள்ள மாமில்லாகட்டா பகுதியைச் சேர்ந்தவர் வட்லகொண்டா கிருஷ்ணா (32). இவர், மாற்று சமூகத்தை சேர்ந்த கோட்லா பார்கவி என்ற பெண்ணை ஆறு மாதங்களுக்கு முன்பு பெண்ணின் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், பில்லாமரி அருகே முசி ஆற்றின் கரையில் இன்று வட்லகொண்டா கிருஷ்ணா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கிருஷ்ணாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார்கவின் குடும்பத்தினர் தான் கிருஷ்ணாவை ஆணவக் கொலை செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், கிருஷ்ணாவுக்கு நேற்று மாலை மகேஷ் என்ற நண்பரிடம் இருந்து தொலைப்பேசி மூலம் அழைப்பு வந்ததாகவும், செல்போனை விட்டுவிட்டு கிருஷ்ணா வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பார்கவி தெரிவித்துள்ளார். ஆணவக் கொலையால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.