குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண் 12 நாட்களுக்கு பின் விடுவிக்கப்பட்டு தனது 14 மாத குழந்தையுடன் சேர்ந்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கும் நிலையில், வாரணாசி தொகுதியில் பெனியா பாக் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மீறி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஏக்தா சேகர் (32), ரவி சேகர் (36) தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு 14 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கிளைமேட் அஜெண்டா எனும் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் இவர்கள் இருவரும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெற்றோரை பிரிந்து அழுத அந்த குழந்தையை ஏக்தாவின் தாய் ஷீலா கடந்த 12 நாட்களாக பார்த்துக்கொண்டு வந்துள்ளார். தாயைக் காணாமல் அந்த குழந்தை அழுது கண்ணீர் வடித்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த ஏக்தா தனது குழந்தையை ஆரத்தழுவி அரவணைத்தார். இதுக்குறித்து பேசிய அவர், " நான் இத்தனை நாட்கள் சிறையில் இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நீண்ட நாட்கள் எனது மகளைப் பிரிந்துவிட்டேன். இப்போது எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. ஆர்வலராகப் போராட்டம் செய்து சிறை சென்றது பெருமையாக இருந்தாலும், தாயாக வருத்தமாக இருக்கிறது. தாய்ப்பால் மட்டுமே உணவாக கொள்ளும் 14 மாதக் குழந்தையைப் பிரிந்ததும் வேதனையாக இருந்தது" என கூறினார். குழந்தையின் தந்தையான ரவி சேகரும் இன்று காலை ஜாமினில் வெளிவந்துள்ளார்.