மத்தியப் பிரதேசத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, 2003 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான மாநில பா.ஜ.க ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமித்ஷா, “ வாரிசு அரசியல் விஷம் போன்றது. வாரிசுகள் அரசியலில் இருந்தால் ஆட்சியும், கட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். காங்கிரஸ், தி.மு.க, உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய கட்சிகள் வாரிசு அரசியல் தான் செய்து வருகின்றன. பா.ஜ.க வில் உள்ள வாரிசுகளில் வெகு சிலருக்கு மட்டும் அவர்களின் திறமைகளின் அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அதை வைத்துக் கொண்டு, வாரிசு அரசியலில் நடக்கும் தீமையின் வீரியத்தை குறைக்க நினைக்க வேண்டாம். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தற்போதைய பிரதமர் மோடி, ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் வந்தவர்கள் தான். அவர்கள் இந்த நாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட மட்டுமே தங்களை அர்ப்பணித்துள்ளனர்.” என்று பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துவதாக மத்தியில் ஆளும் பா.ஜ.க தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக வாரிசுகளில் இருக்கும் மத்திய அமைச்சர்கள் பெயர்களை ஐக்கிய ஜனதா தளம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஜிப் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் கீழ் தான் வருகிறது. பீகாரில் பா.ஜ.க தலைவர் வாரிசு அரசியலின் கீழ் தான் வருகிறது. பீகார் மாநில பா.ஜ.க தலைவர் சாம்ராட் சவுத்ரியின் தந்தை சகுனி சவுத்ரி ஒரு மூத்த அரசியல்வாதி. அதுமட்டுமல்லாமல், மாநில சட்ட பேரவைக்கு பல முறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அனுராக் சிங் தாக்கூர் மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் பல எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் வாரிசு அரசியலுக்கு கீழ் தான் வருகின்றனர். பா.ஜ.க.வில் இது போன்ற அரசியல்வாதிகள் 100க்கும் அதிகமானோர் இருக்கின்றனர். இதன் மூலம் பா.ஜ.க.வை விட பெரிய வாரிசு அரசியல் கட்சி இந்தியாவில் வேறு எந்த கட்சியிலும் இல்லை என்பதை தான் காட்டுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.