இந்தியாவில் கரோனாவுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கரோனாவைத் தடுக்க யாரெல்லாம் 'மாஸ்க்' அணியலாம்? என்பது தொடர்பான விளக்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் "கரோனாவுக்காக அனைவரும் 'மாஸ்க்' அணிய வேண்டிய அவசியமில்லை. இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருப்பவர்கள் மட்டுமே 'மாஸ்க்' அணிந்தால் போதும். கரோனா அறிகுறி உள்ளவர் (அல்லது) உறுதியானவரை பராமரிப்பவர்கள் 'மாஸ்க்' அணியலாம். மூச்சுத்திணறல் உள்ள நோயாளிகளை கவனிக்கும் சுகாதார பணியாளர்கள் தான் 'மாஸ்க்' அணிவது அவசியம்.
'மாஸ்க்' பயன்படுத்தும் போது என்ன செய்யக்கூடாது? அணிந்திருக்கும் போது மாஸ்க்கின் வெளிப்புறத்தைக் கைகளால் தொடக்கூடாது. வாய், மூக்கை முழுமையாக மூடும் வகையில் மாஸ்க்கை சரியாக அணிய வேண்டும். 'மாஸ்க்' அணிந்த பிறகு கழுத்தில் தொங்க விடவோ, மடிக்கவோ கூடாது; ஈரமானாலோ அல்லது 6 மணி நேரம் ஆனாலோ மாஸ்க்கை மாற்ற வேண்டும். 'மாஸ்க்' பயன்படுத்திய பிறகு சோப் அல்லது ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியால் கைகளைக் கழுவ வேண்டும்." இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.