புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (01/04/2021) தேர்தல் பிரச்சாரத்திற்காக புதுச்சேரி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்தா கோயிலுக்கு சென்று பிரார்த்தனை மேற்கொண்டார்.
இதையடுத்து, திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற அமித்ஷா பொதுமக்களிடம் நேரில் வாக்கு சேகரித்தார். புதுச்சேரியின் லாஸ்பேட்டை முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். இதில் அமித்ஷாவுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி மற்றும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் சாமிநாதன், கட்சியின் நிர்வாகிகள் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமித்ஷாவின் வருகையையொட்டி, புதுச்சேரி முழுவதும் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.